சிலை விவகாரத்தில் ஜம்மியத்துல் உலமாவின் வகிபாகம் என்ன?

மாணிக்கமடு மாயக்கல்லிமலை புத்தர் சிலை வைப்பு விவகாரத்தில் பல்வேறு தரப்புக்களும் தங்களது கருத்துக்களை ஊடக அறிக்கைகளாக வெளியிட்டுள்ளதுடன் சம்பந்தப்பட்ட தரப்புக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வறுகின்றமையை நாம் கண்ணூடே காணக் கூடியதாக வுள்ளது. ஆனால் கிழக்கு முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்களில் முன்னின்று செயற்பட வேண்டிய கிழக்கு மாகாண ஜம்மியத்துல் உலமா சபை இவ்விடயத்தில் இற்றைவரை எதுவித ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களையும் செய்ததாக அறிய முடியவில்லை.

கடந்த ஆறு மாதங்ளுக்கு முன்னர் இந்த சிலை வைப்பு இடம்பெற்றபோதே அரசியல்   கட்சிகள், சிவில் அமைப்புக்கள் உட்பட பல்வேறு தரப்புகள் இந்த சிலை வைப்பு விவகாரம் இன நல்லுறவில் விரிசலை தோற்றுவிப்பதுடன் பல விபரீதமான பின்விளைவுகளையும் ஏற்படுத்தும் என்ற வாதங்களை முன்வைத்து அரசு இவ்விடயத்தில் தலையீடு செய்ய வேண்டுமெனவும் கோரிக்கைகள் விடுத்து வருகின்றன. ஆனால் கிழக்கு மாகாண ஜம்மியத்துல் உலமா சபை இச்சிலை வைப்பு தொடர்பில் யார் யாரை இதுவரை சந்தித்தது அல்லது ஏதாவது அறிக்கைகளை விடுத்துள்ளதா என கேள்விக்குட்படுத்த வேண்டியுள்ளது.

ஆறு மாதங்களுக்கு முன்னர் சிலை வைக்கப்பட்டு ஆறவிடப்பட்டுக் கிடந்த மாணிக்கமடு பிரச்சினை, கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த சிலையை அண்டிய முஸ்லிம் ஒருவரின் காணியில் விகாரை அமைக்க சிலர் எடுத்த முயற்சியால் பூதாகமாக மாறியதுடன் மட்டுமல்லாது முஸ்லிம்களுக்கு எதிராக பல விவகாரங்களில் நேரடி தொடர்புடையவர் என குற்றம் சாட்டப்படும் பொது பல சேன அமைப்பின் செயலாளர் ஞான சார தேரரின் மாணிக்கமடு வருகையால் பூகம்பமாக மாறியுள்ளது.

இவ்வாறு மாணிக்கமடு சிலை விவகாரம் நீறுபூத்த நெருப்பாக மாறிவரும் நிலையில் இந்த சிலை அகற்றப்பட வேண்டும் என தெரிவித்து ஹர்தால் மற்றும் கண்டன நிகழ்வுகளும் ஆங்காங்கே நடபெற்று வருகின்றமையை ஊடங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. ஆனால், கிழக்கு மாகாண ஐம்மியத்துல் உலமா சபை இப்பிரச்சினை விடயமாக எந்த செயற்பாடுகளையும் செய்யதாக எந்த ஊடகத்திலும் செய்திகளை காண முடியவில்லை.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவர் றவூப் ஹக்கீமுக்கும் அதன் முன்னாள் செயலாளர் ஹஸனலிக்கும் முறுகல் வந்தபோது அந்த கட்சிப் பிரச்சினைக்கு சமரச தீர்வுகாண விழுந்தடித்துக் கொண்டு தாறுஸ்ஸலாம் சென்ற கிழக்கு மாகாண ஜம்மியத்துல் உலமா சபையின் உலமாக்களுக்கு மாணிக்கமடு பிரச்சினை ஒரு பொருட்டாக தெரியவில்லையா. ஒரு கட்சியின் உள்வீட்டு விவகாரத்தை தேசிய பிரச்சினை போன்று சிதத்தரித்து பஞ்சாயத்து பண்ண புறப்பட்ட உங்களுக்கு முஸ்லிம்களின் நிலங்களை சூறையாடும் சிலை வைப்பு  விவகாரம் செல்லாக் காசாகப் போய்விட்டதாக எண்ண தோன்றுகிறது.

இந்த சிலை வைப்பு விவகாரத்திலும் விகாரை கட்டுவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டுள்ள பௌத்த தேரர்கள் தீகாவாபி அல்லது இறக்காமத்தை அண்டிய பகுதிகளைச் சேர்ந்த விகாரைகளில் உள்ள தேரர்கள் அல்ல எனவும் இவர்கள் எங்கிருந்தோ வந்து இந்த சிலை  வைப்பு விவகாரங்களில் ஈடுபடுகின்றனர் என்றும் அண்மையில் இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சட்டத்தரணியின் பேட்டியின்போது சுட்டிக் காட்டியிருந்தார். அப்படியாயின் இந்த பௌத்த தேரர்கள் குழு இன நல்லுறவுக்கு குந்தகம் விளைவிக்க முற்படுகின்றமை தொடர்பில் கலந்துரையாட சர்வமத தலைவர்களுடான கலந்துரையாடலை நடாத்தி அவர்களுடாக  சிலை வைப்பு விவகாரத்திற்கு ஒரு தீர்வினை பெற்றுக் கொள்வதற்கும் முயற்சித்திருக்காலாமல்லவா.

முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கு தீர்வு பெற்றுக் கொடுக்க முயற்சித்த நீங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி செயலாளர் விவகாரத்திற்கும் ஒரு சமரச நடடிக்கை எடுக்க முயற்சிக்காமலிருப்பதானது நீங்கள் பக்கச் சார்பு அரசியலில் ஈடுபடுகின்றீர்களா என்ற சந்தேகத்தையும் தோற்றுவிக்கின்றது.

எனவே, இங்கை முஸ்லிம்களின் குறிப்பாக வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் இருப்புக்கு எதிரான நிகழ்ச்சி நிரல்கள்  அரங்கேற்றப்பட்டு வருகின்ற இக்கால கட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராகமேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு தீர்வு காண உங்களான பணிகளை  செய்ய முற்படுவதோடு தேவைப்படுமிடத்து நமது பிரச்சினைகளை சர்வதேச அரபு நாடுகளுக்கும் தெளிவுபடுத்தி  முஸ்லிம்களுக்கு எதிரான விவகாரங்களுக்கு உரிய தீர்வினை வழங்குமாறு அரபு நாடுகளைக் கொண்டு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான காத்திரமான நடவடிக்கைகளை கிழக்கு மாகாண ஜம்மியத்துல் உலமா முன்னெடுத்தல் சாலச் சிறந்ததாகும்.

No comments

http://unmyentresanam1.blogspot.qa/search?q=facebook+share http://unmyentresanam1.blogspot.qa/sear . Powered by Blogger.