12000 ஏக்கர் பரப்பளவு கொண்ட தீகபாவி புனித பூமிப்பிரதேசம் 656 ஏக்கராக மாறியுள்ளது.!

தமிழர்களைப் போன்று முஸ்லிம்களும் கிழக்கில் தனிநாடு கோரியவர்கள். அதற்கெனவே முஸ்லிம் தலைவர்கள் சிலர் ஒலுவில் பல்கலைக்கழகத்தில் ஒன்று கூடி ஒலுவில் பிரகடனத்தை வெளியிட்டார்கள். இந்நாட்டை எவரும் உரிமை கொண்டாட முடியாது இது சிங்கள பெளத்த நாடாகும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் தான் எழுதிய அல்ஜிஹாத் அல்கைதா எனும் நூலை வெளியிட்டு வைத்து உரை நிகழ்த்துகையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில், கடந்த 10 வருடங்களுக்கு முன்பு 2003 ஆம் ஆண்டில் இந்த அல்ஜிஹாத் அல்கைதா என்ற நூலை எழுதினேன். இன்று அந்த நூல் மேலும் பல விபரங்கள் சேர்க்கப்பட்டு புதிய பதிப்பாக வெளியிடப்படுகிறது. முஸ்லிம்கள் கிழக்கில் ஆயிரக்கணக்கான வருடங்கள் வாழ்ந்து வருவதாகவும் இதனால் கிழக்கில் அவர்களுக்கு தனியாட்சி வேண்டுமெனவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஒலுவில் பிரகடனம் இதனையே தெரிவித்தது.

ஒலுவில் பிரகடனம் எனது மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. முஸ்லிம்களும் தமிழர்களும் இந்நாட்டைப் பிரித்துக் கொள்வார்கள் என்று எனது அடிமனது கூறியது. இச்சூழ்நிலையே இந்த நூலை எழுதுவதற்கு காரணமாய் அமைந்தது. நூலில் முஸ்லிம் அடிப்படை வாதத்தின் கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் பற்றி எழுதியுள்ளேன்.

முஸ்லிம்களுக்கு இந்நாட்டில் 1300 வருடகால வரலாறு உள்ளதெனக்கூறுகிறார்கள். இது தவறு போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோது இலங்கையில் முஸ்லிம்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் குடியுரிமை பெற்றிருக்கவில்லை. போர்த்துக்கீசர் இலங்கையிலிருந்த முஸ்லிம்களுக்கு எதிராகவே செயற்பட்டார்கள். அவர்களை விரட்டியடித்தார்கள். முஸ்லிம்களின் வியாபாரத்தை தடை செய்தார்கள். ஆனால் சிங்கள அரசர்களே முஸ்லிம்களைப் பாதுகாத்தார்கள்.

1518,1538ஆம் ஆண்டுகளில் முஸ்லிம்கள் விஜயபாகு போன்ற அரசர்களாலேயே காப்பாற்றப்பட்டார்கள். இலங்கையில் சிங்களப் பெண்களை மணமுடித்து வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்கள் போர்த்துக்கீசருடன் போராட அழைக்கப்பட்ட போது அதற்கு அவர்கள் இணங்கவில்லை. 1821 ஆம் ஆண்டிலேயே போர்த்துக்கீசர் முஸ்லிம்களை அங்கீகரித்தனர். இதுவே அவர்களின் வரலாறு.

கடந்த கால யுத்தத்தின் போது நாட்டைக் காப்பாற்றுவதற்கு பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டினை மீட்பதற்கு எந்தவொரு முஸ்லிமும் முன்வரவில்லை. சிங்கள இராணுவத்தினரே உயிர்த் தியாகங்களைச் செய்து வடக்கினையும் கிழக்கினையும் மீட்டெடுத்தனர். சிங்கள வீரர்கள் செய்த உயிர்த்தியாகங்களினாலே இன்று முஸ்லிம்கள் வடக்கிலும் கிழக்கிலும் சுதந்திரமாக சகல வளங்களுடனும் வாழ்கின்றனர். இதனை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் திகதிக்கும் 9 ஆம் திகதிக்கும் இடையில் வன்னிப் போர் நடந்தது. இதில் இலங்கை இராணுவம் தோல்வியைத் தழுவியது. இக்காலகட்டத்தில் நாம் அப்பகுதி முஸ்லிம் கிராமங்கள் தோறும் சென்று உதவி கோரினோம். ஆனால் ஒரு முஸ்லிம் கூட உதவ முன்வரவில்லை.

எல்.ரி.ரி.ஈயினால் பள்ளிவாசல்களுக்குள் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர். ஆனால் ஒரு முஸ்லிம் அரசியல்வாதியேனும் முஸ்லிம்களை நாட்டுக்காக எல்.ரி.ரி.ஈயை எதிர்த்துப் போராடும் படி கோரவில்லை.

உலமா சபை கூட விடுதலைப்புலிகளுக்கு எதிராகப் பேசவில்லை. முஸ்லிம்கள் நாட்டைப் பாதுகாப்பதற்காக இராணுவத்தில் இணையவுமில்லை. சிங்கள இராணுவத்தினர் மாத்திரமே போராடினார்கள். 30 வருட கால யுத்தத்தில் 93 முஸ்லிம் பாதுகாப்புப் படையினரே உயிர்த்தியாகம் செய்துள்ளனர். இதே வேளை 26 678 சிங்கள இராணுவத்தினர் நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்துள்ளனர்.

2005 மற்றும் 2010 பொதுத் தேர்தல்களில் ரிசாத்பதியுதீன் அதாவுல்லா போன்ற முஸ்லிம் தலைவர்களே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு உதவினார்கள். ஏனையவர்கள் ஜனாதிபதியை தோற்கடிக்கச் செய்வதிலே குறியாக இருந்தார்கள். உலமா சபை கூட ஜனாதிபதிக்கு வாக்களிக்குமாறு கூறவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பவற்றின் உதவியில்லாமல் ஜனாதிபதியை தெரிவு செய்யலாம் என்பதை 2005ல் நாம் உறுதி செய்தோம்.

மூதூரில் 115 முஸ்லிம்கள் எல்.ரி.ரி.ஈயினால் படுகொலை செய்யப்பட்ட போது முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம்கள் எல்.ரி.ரி.ஈயினாலா அல்லது இராணுவத்தினராலா கொலை செய்யப்பட்டார்கள் என்பது சந்தேகமாக உள்ளது என்றார்கள்.

யுத்த சூழ் நிலையில் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் அகதிகளாக கந்தளாய்க்கு வந்தார்கள். அவர்களுக்கு சிங்களவர்களே உணவும்,தங்குமிடமும் வழங்கினார்கள். அப்போது முஸ்லிம்கள் உணவு ஹலாலானதா என்று வினவவில்லை. உணவு வேண்டாம் என்று கூறவில்லை.

2010 ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் முன்னாள் ஜனாதிபதியைத் தோற்கடிக்கவே முயற்சித்தார்கள். இன்று பூனையைப் போன்று இது எமது நாடு முஸ்லிம்கள் நாட்டுக்கு துரோகம் செய்யவில்லை நாட்டைப் பிரிக்க நாம் கை உயர்த்தவில்லை என்கிறார்கள்.

முன்னாள் மறைந்த ஜனாதிபதி பிரேமதாஸாவின் ஆட்சிக்காலத்தின் போது அவர் சர்வதேச ரீதியில் பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருந்தார். இந்நிலைமையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் மாணவிகளுக்கு ஹிஜாப் மற்றும் புர்க்காவை சட்ட ரீதியாக்கிக் கொண்டார்கள். இதற்கான வர்த்தமானியும் வெளியிடப்பட்டது. ஆனால் 1990 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலங்களில் முஸ்லிம்களின் இந்த ஆடைக்கலாசாரம் நாட்டில் இருக்கவில்லை.

இதே போன்று இன்றைய சூழ்நிலையில் ஜனாதிபதி ஜெனீவாவில் சர்வதேசத்திடம் சிக்கியிருக்கிறார் என்று நினைத்து ஹலால் விவகாரத்தை முன்னெடுப்பதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளமுடியாது.

தீகவாபி புனித பிரதேசம் பெளத்த வரலாற்றுப் பிரதேசமாகும். தீகவாபியை கைப்பற்றிக்கொள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயற்படுகிறது. 12000 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த புனித பூமிப்பிரதேசம் இன்று 656 ஏக்கராக மாறியுள்ளது. பெளத்த விகாரைப் பிரதேசங்கள் பெளத்த மரபுரிமைகள் புல்டோசர்களினால் அழிக்கப்பட்டு வருகின்றன. முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தியே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

அரச சார்பற்ற நிறுவனங்களும் ஆங்கில ஊடகங்களும் தமிழ் ஊடகங்களும் பெளத்த அமைப்புகளுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வருகிறது. தமிழ் இணைய தளங்களும் சிங்களவர்களுக்கு எதிராக செயற்பட்டு வருகின்றன. நான் அபுதாபியில் இருக்கும் போது பத்திரிகைகளின் முழுபக்க செய்திகளை வாசிக்க முடிந்தது. இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனாவும் ஜாதிகஹெல உறுமையும் செயற்படுவதாக செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நான் பாடசாலையிலும் பல்கலைக்கழகத்திலும் பயின்று கொண்டிருந்த போது கமால் அப்துல் நாஸர் லிபியாவின் கர்ணல் கடாபி போன்ற தலைவர்களை மதித்தேன்.

1979 இல் ஈரானிய புரட்சியின் போது ஈரானிய பல்கலைக்கழக மாணவர்கள் அமெரிக்க தூதுவராலயத்தை ஆக்கிரமித்து மேற்கொண்ட நடவடிக்கைகளை நான் பெருமையாக நினைத்தேன். அவர்கள் தமது கலாசாரத்தைப் பாதுகாக்கிறார்கள் என்று நினைத்தேன்.

இதேவேளை நான் திறந்த பல்கலைக்கழகத்தில் படித்துக் கொடுத்துக் கொண்டிருந்த போது நடந்த சம்பவம் எனது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. என்னிடம் படித்துக் கொண்டிருந்த ஒரு முஸ்லிம் மாணவிக்கும் ஒரு சிங்கள மாணவனுக்கும் காதல் தொடர்பு ஏற்பட்டது.

இதனையடுத்து பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் இந்த மாணவியை வகுப்பிலிருந்து வெளியேற்றுமாறு என்னிடம் கோரியது மார்க்கத்துக்கு விரோதமான செயல் என்றது காதலுக்கு இடம் கொடுக்க முடியாது என்றது.

எனக்கு ஒரு குர்ஆன் பிரதி தரப்பட்டது. குர்ஆனின் 221 ஆம் பிரிவு 2 சூறாவில் முஸ்லிம்கள் சிலை வணங்குபவர்களை மணம்முடிக்க முடியாது என்று கூறப்பட்டிருந்தது. குறிப்பிட்ட மாணவி தன்னால் வீட்டிலும் சமூகத்திலும் வாழ முடியாது என்று அழுதாள்.

இப்போது குறிப்பிட்ட மாணவி பாரிஸில்தான் விரும்பியவருடன் சுதந்திரமாக வாழ்கிறார். அவருக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. ஏன் காதலுக்கு இந்தப் பிரச்சினை.

நான் பாரிஸுக்கு வந்திருக்காவிட்டால் எனது கழுத்தை வெட்ட முயற்சித்திருப்பார்கள் என்றும் அவள் என்னிடம் தெரிவித்தாள்.

முஸ்லிம் பெண்களுக்கு இந் நாட்டில் வாக்குரிமையைப்பெற்றுக் கொடுத்தவர்கள் சிங்களவர்கள் என்பதை முஸ்லிம் பெண்கள் மறந்து விடக்கூடாது. சர்வசன வாக்குரிமை தொடர்பில் டொனமூர் கமிஷனைச் சந்தித்த முஸ்லிம் பிரதிநிதிகள் முஸ்லிம் ஆண்களுக்கு மாத்திரமே வாக்குரிமை கோரினர். முஸ்லிம்களில் ஆண் பெண் சமமில்லை என்ற கருத்தினைத் தெரிவித்தனர். ஆண்கள் பெண்களை விட மேலானவர் என்றனர். அதனால் முஸ்லிம் பெண்களுக்கு வாக்குரிமை வேண்டாம் என்றார்கள்.

ஆனால் டொனமூர் கமிஷன் முன்னிலையில் பிக்குகளும் சிங்களவர்களும் பெண்களுக்கு சம அந்தஸ்து கோரினார்கள். இதனாலேயே 10 இலட்சம் முஸ்லிம் பெண்கள் இன்று வாக்குரிமை பெற்றிருக்கின்றார்கள்.

கல்வித்துறையில் முஸ்லிம் பெண்களுக்கு சம அந்தஸ்தினை கன்னங்கரா வழங்கியதினாலேயே முஸ்லிம் பெண்கள் இன்று உயர்கல்வி கற்கிறார்கள். பல்கலைக் கழகங்களிலிருந்து டாக்டராக பொறியியலா ளர்களாக வெளியேறி சேவை செய்கிறார்கள். இது பற்றி நான் சந்தோசப்படுகிறேன்.

தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டதாக கூறுகிறார்கள் 10 பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுள்ளதாக சர்வதேசத்துக்கு கூறுகிறார்கள். ஆனால் விடுதலைப்புலிகளின் காலத்தில் நடந்தவைகள் பற்றி உலமா சபையோ முஸ்லிம் அரசியல் தலைவர்களோ வாய்திறக்கவில்லை.

மாலைத்தீவிலிருந்து எமது நாட்டுக்கு வந்த 56 ஆயிரம் முஸ்லிம்கள் சட்ட விரோதமாக தங்கியிருக்கிறார்கள். இங்கு இவர்கள் கல்வி கற்பதற்கென வந்தவர்கள். இவர்கள் தொடர்பாக நாம் தேடிப்பார்க்க வேண்டும் என்றார்.

No comments

http://unmyentresanam1.blogspot.qa/search?q=facebook+share http://unmyentresanam1.blogspot.qa/sear . Powered by Blogger.